புதுடெல்லி:
மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினரின் இந்த திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தோல்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் பாஜக கடைபிடிக்கும் வழிமுறை ஐடி ரெய்டுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.