டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, டெல்லி 4வது அலையை எதிர்கொண்டு வருவதை உணர்த்துவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில்  அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:  டெல்லியில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை. அது குறித்து ஆலோசிக்கப்படவும் இல்லை.

கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3,583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது 4வது அலை வீசுகிறது என்பது தெரிகிறது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சையளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று  அவர் கூறி உள்ளார்.