டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி அன்றைய தினம் (அக்.20) டெல்லியின் பிரபலமான இனிப்பு பொருட்கள் விற்பனை கடையான, கந்தேவாலா இனிப்புக் கடைக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்கு இமார்த்தி (ஜிலேபி) மற்றும் பெசன் லட்டுகளை கைகளால் செய்து அசத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தீபாவளியையொட்டி, டெல்லியில் உள்ள பிரபல இனிப்புக் கடைக்கு சென்று, அங்குள்ள சமையல் நிபுணரின் ஆலோசனையுடன் தனது கைகளால் இனிப்பு பலகாரங்கள் செய்தார். அவருக்கு கடை உரிமையாளர், சமையற்கலை நிபுணர் உள்பட பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அக்டோபர் 20ந்தேதி (நேற்று) நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பும் கண்டிப்பாக இடைபெறும். இந்த நிலையில், பழைய டெ ல்லி பகுதியில் அமைந்துள்ள 235 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற இனிப்பு கடையான கந்தேவாலா சுவிட் ஸ்டாலுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் தலைவருமான நேற்று ராகுல் காந்தி சென்றார்.
கடைக்கு சென்ற ராகுல்காந்தியை அந்த கடையின் உரிமையாளர்கள், பணியாளர்களுடன் சிறப்பாக வரவேற்றனர். இதையடுத்து, உரையாடிய ராகுல் காந்தி, சமையலறைக்குச் சென்று இமார்தி (ஜிலேபி வகை) பலகாரத்தை தன்கைகளால் சுட்டுள்ளார். மேலும், பெசன் லட்டுவையும் தயாரித்தார். பின்பு, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வாங்கிச் சென்றார்.

இதுதொடர்பான காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டேவாலா இனிப்புக் கடையில் இமார்டி மற்றும் பெசன் லட்டுகளை தயாரிக்க முயற்சித்தேன். நூற்றாண்டுகள் பழமையான இந்த மதிப்புமிக்க கடையின் இனிப்பு இன்றும் அப்படியே உள்ளது. தூய்மையானதாகவும், பாரம்பரியமிக்கதாகவும் இதயத்தை தொடும் வகையிலும் இருக்கிறது. தீபாவளியின் உண்மையான இனிப்பு தட்டில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது. உங்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடுகிறீர்கள், அதை எப்படி சிறப்பானதாக்குகிறீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள்?” எனப் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியுடன் உரையாடியது குறித்து செய்தியாளர்களிடம் பேசியகண்டேவாலா கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், “ராகுல் காந்தி தனது வீட்டிற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்புகள் வாங்க விரும்பினார். அவரே இனிப்பை செய்து ருசிப்பதாக தெரிவித்தார். மறைந்த அவரது தந்தை ராஜீவ் காந்திக்கு இமார்டி மிகவும் பிடிக்கும். அதனால், இமார்டி செய்ய நீங்கள் முயற்சியுங்கள் என்றேன். அதனால் அவர் இமார்டி செய்தார். அவருக்கு பெசன் லட்டு மிகவும் பிடிக்கும், அதனால் நான், நீங்கள் அதையும் செய்யலாம் என்றேன். அதனால் அவர் இந்த இரண்டு இனிப்பையும் செய்தார்.
இந்தியாவுக்கே அவர் திருமணமாகாதவர் என்று தெரியும். அதனால், விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள், நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம், உங்களின் திருமணம் இனிப்பு ஆர்டருக்கும் என்று அவரிடம் தெரிவித்தேன்” என்றார்.