யநாடு

கேரளாவின் சமத்துவபுரம் என அழைக்கப்படும் வயநாட்டில் அமைந்துள்ள மக்கள் கிராமத்தை வரும் 13 ஆம் தேதி ராகுல் காந்தி திறந்து வைக்கிறார்.

கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.  இவற்றில் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பனைமரம் கிராமமும் ஒன்றாகும்.  அங்கு வெள்ளத்தைப் பார்வையிடச் சென்றிருந்த ஜமாத் இ இஸ்லாமி இந்த் இன்னும் அமைப்பு மண்ணில் முழுவதும் புதைந்த 25 வீடுகளை கட்டித தருவதாகத் தெரிவித்தனர்.

அதன்படி இந்த அமைப்பின் சேவை பிரிவான பூப்பிள் ஃபவுண்டேஷன் சார்பில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கின.  சுமார் இரண்டு கோடி மதிப்பில் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகள் சென்ற மார்ச் மாதம் தயாராக இருந்தன.   ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாகத் தள்ளிப் போனது.

இதனால் அந்த வீடுகளில் வசித்தோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  இதை உணர்ந்த  அமைப்பு நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் வீடுகளைத் திறந்து வைக்க முடிவு செய்தது. வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி காணொளி மூலம் வரும் 13 ஆம் தேதி வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒப்படைக்க உள்ளார்,

இந்த குடியிருப்பில் நூலகம், ஆரோக்கிய மையம், பாலர் பள்ளி ஆகிய வசதிகளுடன் பல சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்க உள்ளனர்.  எனவே இதைக் கேரள சமத்துவபுரம் எனக் கூறலாம். இந்த குடியிருப்புக்கு ‘மக்கள் கிராமம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.