ஐதராபாத்: மாநில அரசின் நடவடிக்கை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளை டிஆர்எஸ் மாநில அரசு கைது செய்து சஞ்சலகுடா சிறையில் அடைத்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சிறைச்சாலைக்குள் சென்று சந்தித்து பேசினார்.

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ( 2023) நடைபெற உள்ளது. அங்கு தற்போது ஆட்சி செய்து வரும் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன.  தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என தெலுங்கான மாநிலம் வாரங்கல்லில்  நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார். மேலும் தெலுங்கானாவில்  காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ரூ 2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.

இதற்கிடையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று (7-ந் தேதி) மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு  பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதற்கு காரணமாக தேர்வு நடைபெறுவதாக கூறியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,  காங்கிரசின் மாணவர் சங்கத்தினர், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது பல்கலைக்கழக  கட்டிடம் மீது கற்களை வீசப்பட்டது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நெருக்கடி கொடுத்ததால்தான், பல்கலைக்கழகம் அனுமதி மறுத்து விட்டதாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இன்று தெலுங்கானா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் காங்கிரசாரை ராகுல்காந்திஇன்று சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

அநீதிக்கு எதிராக தன்னலமற்ற போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புள்ள உழைப்பாளிகளே. நான் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதற்காக TRS அரசாங்கத்தால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட 18 NSUI மாணவர் தலைவர்களை சஞ்சல்குடா சிறையில் சந்தித்தேன் என கூறியுள்ளர்.