தென் இந்தியாவில் இருந்து இந்த முறை காங்கிரசுக்கு பெரும் அளவிலான எம்.பி.க்கள் கிடைக்கும் வகையில் அந்த கட்சி வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளது.

வெற்றிக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக தென் இந்தியாவில் ஏதாவது ஒரு தொகுதியில் கட்சி தலைவர் ராகுல்காந்தியை களம் இறக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை  தொடங்கியுள்ளது.

இந்திரா குடும்பத்துக்கு  கர்நாடகம்- ரொம்பவும் நெருக்கமானது.1977- ஆம் ஆண்டு  தேர்தலில் இந்திரா ரேபரேலியில் தோற்கடிக்கப்பட்டு துவண்டு இருந்த நேரம் .அப்போது கர்நாடகத்தில் இருந்து தான் அவர் தனது அடுத்த கட்ட நகர்வுகளை ஆக்ரோஷமாக  ஆரம்பித்தார்.

1978-ல் அங்குள்ள சிக்மகளூரு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வாகை சூடினார்.2 ஆண்டு களில் மத்தியில் ஆட்சியை பிடித்தார்.

ராகுலின் அன்னை சோனியாகாந்தி –அதே மாநிலத்தில் உள்ள பெல்லாரி தொகுதியில் 1999 ஆம் ஆண்டு போட்டியிட்டு ஜெயித்தார். அவரிடம் தோற்ற பா.ஜ.க.வேட்பாளர்- சுஷ்மா சுவராஜ்.

சரித்திரம் மீண்டும் திரும்புகிறது.

அமேதியில் ராகுல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்-

அவர் கர்நாடகத்திலும் போட்டியிட வேண்டும் என முன்னாள் முதல்வர்  சித்தராமய்யாவில் தொடங்கி மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வரை அழைப்பு விடுத்துள்ளனர்.

இங்கு ராகுல் போட்டியிட்டால்-வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் ‘பாலம்’ போட்டது போல் இருக்கும் என்பதால்- இந்த அழைப்பை ராகுல் ஏற்பார் என்றே தெரிகிறது.

எந்த தொகுதியில் போட்டியிடுவார்?

இந்திரா வென்ற சிக்மகளூரு -தொகுதி மறு சீரமைப்பில் உடுப்பி சிக்மகளூரு தொகுதியாகி விட்டது.அந்த தொகுதியை  –கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது.

சோனியா ஜெயித்த பெல்லாரி தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தாலும்-அது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.

எனவே-

காங்கிரஸ் தன் வசம் உள்ள ஒரு தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு  கொடுத்து விட்டு- அதற்கு பதிலாக உடுப்பி சிக்மகளூருவை – தேவகவுடா கட்சியிடம் இருந்து வாங்கி ராகுலை போட்டியிட வைக்கலாம். அல்லது காங்கிரசுக்கு செல்வாக்குள்ள ஏதாவது  ஒரு இடத்தில் ராகுலை நிறுத்தலாம்.

–பாப்பாங்குளம் பாரதி