மைசூர்:
மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல்.
மைசூரில் உள்ள மஹாராணி பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டார்.
மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், `நிரவ் மோடி ரூ.22,000 கோடி வங்கிப் பணத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார். இந்த ரூ.22, 000 கோடியை, உங்களைப் போன்ற நாட்டில் உள்ள பெண்களிடம் கொடுத்தால், எத்தனை தொழில்கள் செய்யமுடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்’.
தற்போது நாட்டில் வேலை வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியவில்லை. இதற்குக் காரணம், திறமை உள்ளவர்களுக்கு நிதி ஆதரவு கிடைப்பது இல்லை. ஏனென்றால் மிகப்பெரும் தொகை 15 – 20 பேருக்கு மட்டும் செல்கிறது” என்று ராகுல் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மாணவி ஒருவர் எழுந்து நின்று, “உங்களுடன் நான் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
இதை எதிர்பார்க்காத ராகுல், தாமதிக்காமல் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, அந்த மாணவியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வீடியோ காட்சியைப் பதிந்து, “எளிமையான தலைவர் ராகுல்” என்று கருத்திட்டு பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.