திருவனந்தபுரம்:
கேரளாவில் தனது 5வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி இன்று காலை தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி நேற்றுடன் தமிழகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்தார். பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன் என உருக்கமாக பேசினார். பின்னர் நேற்று இரவு கேரள சென்ற அவர் இன்று காலை மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்கினார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் அடுத்த 18 நாட்களில் ராகுல் காந்தி கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று காலை பாறைசாலை பகுதியில் இருந்து தனது நடைபயணத்தை துவங்கினார்.

இன்றைய பயணத்தில் 12 கிலோ மீட்டர் நடந்து நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள GR Public school ல் ஒய்வு எடுக்கவுள்ளார். அதன் பின் மாலை அங்கிருந்து திரும்பி வெள்ளயாணி பகுதியில் உள்ள agriculture college ல் தங்குகிறார். தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு நாட்கள் நடை பயணம் மேற்கொள்கிறார்.