டில்லி,
அகில இந்திய காங்கிரசின் 113வது ஆண்டு தொடக்க விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, ஆட்சியிலிருக்கும் பா.ஜ. தலைவர்களால் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.
1885, டிசம்பர் 28-ந்தேதி ஆலம் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நுற்றாண்டை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பாரம்பரியம் மிக்க அந்த கட்சி தொடங்கப்பட்ட 133-வது ஆண்டு விழா டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது-
நாட்டின் உச்சபட்சமாக, அடிப்படை கட்டமைப்பாக இருக்கக் கூடிய அரசியலமைப்புச் சட்டம் தற்போது அச்சுறுத்தலில் இருக்கிறது. பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களால் நேரடியாகவே அரசியலமைப்புச் சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலில் இருந்து காக்க வேண்டிய கடமை என்பது ஒவ்வொரு இந்தியனின், காங்கிரஸ் தொண்டரின் கடமையாகும்.
உண்மைக்கு மாறான விஷயங்களை கூறி ஒருவரை ஏமாற்றுவதுதான் இன்று நாட்டில் நடந்து வருகிறது. அரசியல் ஆதாயம் அடைவதற்காக பா.ஜனதா கட்சி பொய்களை கூசாமல் அள்ளி வீசுகிறது.
இதில் பா.ஜனதா கட்சியில் இருந்து நாம் வேறுபட்டு இருக்க வேண்டும். நாம் தேர்தலில் சிறப்பாக செயல்படாமல் இருந்திருக்கலாம், தோல்விகூட அடைந்திருக்கலாம், ஆனால், உண்மையை ஒருபோதும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல்காந்தியின் பேச்சு, மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டியே அமைந்திருந்தது.
அதைத்தொடர்ந்து, பேசிய குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் தொடக்க விழாவை முன்னிட்டு, “ காங்கிரஸ் கட்சியின் நிறுவிய ஆண்டில் நாட்டுக்காக உயிர் நீத்த காங்கிரஸ் கட்சியின் ஆண், பெண் தொண்டர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். ஆனால், இந்த நாட்டுக்குள்ளே யே இருக்கும் சில சக்திகள், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்று முயற்சிக்கின்றன. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.