மும்பை:
‘‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்வாலே பேசுகையில், ‘‘ராகுல் காந்தி நாளுக்கு நாள் முதிர்ச்சி பெற்று வருகிறார். அவரை இனி சிறு குழந்தை என்று சொல்ல இயலாது. அவர் தலித் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவு சாப்பிடுகிறார். அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும்.
காந்தியின் கருத்தினை ராகுல்காந்தி பின்பற்ற வேண்டும். அவரை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். எனினும் ஒரு தலித் பெண்ணை திருமணம செய்துகொள்ள ராகுல்காந்திமுன் வரவேண்டு’’ என்றார்.
சமீபத்தில் ராகுல்காந்தியிடம் திருமணம் எப்போது? என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கேட்டிருந்தார். அதற்கு ராகுல் பதில் கூறுகையில், ‘‘ அது எப்போது நடக்க வேண்டுமோ? அப்போது நடக்கும்’’ என்று பதில் கூறியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.