கோவிந்த்பூர்
காங்கிரஸ் கட்சி பழங்குடியினரின் வனம் மற்றும் நிலத்தைப் பாதுகாக்கும் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
கடந்த மாதம் 14 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மணிப்பூரில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் துன்டியில் முடிவடைந்தது. நேற்று காலை மீண்டும் தான்பாத் நகரின் கோவிந்த்பூரில் யாத்திரை தொடங்கியது.
ராகுல் காந்தி சாலை பேரணியாகச் சென்ற போது சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். இந்தச் சாலை பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றி உள்ளார்.
அவர் தனது உரையில்
“பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைத் தடுப்பதுதான் நான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் ஆகும், இளைஞர்களுக்கும், பழங்குடியினருக்கும் நீதியை உறுதி செய்வதும் எங்கள் நோக்கம் ஆகும்.
பழங்குடி மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றைக் காங்கிரஸ் பாதுகாக்கும். இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குப் பாடுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வேலையின்மை ஆகியவை நாட்டின் இளைஞர்களது எதிர்காலத்தை சீரழித்து விட்டன”
என்று அவர் கூறியுள்ளார்.