ச்ராவன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக கண்டித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். முதலில், சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பிறகு, பச்ராவன் சென்று அங்கு காங்கிரஸ் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.

ராகுல் காந்தி அப்போது,

”வாக்குச்சாவடி மட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையானதாக வைத்திருக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்து விட்டது. ஆனால், பா.ஜ.க. அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப முயன்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, ராகுல்காந்தி வருகையின்போது, தாங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.

பின்னர், மூல் பாரதி விடுதியின் பட்டியல் இன மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, முதல் 500 இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்ட ராகுல்காந்தி, அவற்றில் பட்டியல் இனத்தவர் தலைமை பொறுப்பில் இருக்கிறார்களா என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவர், ‘இல்லை’ என்று பதில் அளித்தார். ‘ஏன்?’ என்று ராகுல்காந்தி கேட்டதற்கு, ‘எங்களிடம் போதிய வசதிகள் இல்லை’ என்று மாணவர் பதில் அளித்தார். அதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:-

அம்பேத்கருக்கு எந்த வசதியும் இல்லை. அவர் தனியாகவே முயற்சி செய்தார். நாட்டின் அரசியலை அசைத்துக் காண்பித்தார். ஒட்டுமொத்த அமைப்பும் உங்களுக்கு எதிராக உள்ளது. நீங்கள் முன்னேறுவதை விரும்புவது இல்லை. தினந்தோறும் உங்களை தாக்குகிறது. அரசியல் சாசனத்தின் கொள்கை, உங்களது கொள்கை. நாட்டில் பட்டியல் இனத்தவர் இல்லாவிட்டால், அரசியல் சாசனம் கிடைத்திருக்காது. அது உங்கள் கொள்கை, உங்கள் அரசியல் சாசனம். இருப்பினும், நீங்கள் எங்கு சென்றாலும் அமைப்பால் நசுக்கப்படுகிறீர்கள்.

என்று கூறியுள்ளார்.