டில்லி
கர்நாடகாவை கொள்ளை அடித்தவர்களுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மோடி வாய்ப்பளித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
வரும் மே மாதம் 12ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் மே மாதம் 15ஆம் தேதி வெளிவருகிறது. இந்த தேர்தல் வியூகம் குறித்து இன்று பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களிடம் உரையாற்றி வருகிறார். காங்கிரஸும் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஆட்சியில் இருக்கும் போது எடியூரப்பாவும் ரெட்டி சகோதரர்களும் கர்நாடகாவை கொள்ளை அடித்தனர். எங்கள் அரசு அதை நீதியின் கீழ் கொண்டு வந்தது. இப்போது மோடி அவர்களை சிறையில் இருந்து சட்டப்பேரவைக்கு அழைத்துச் செல்ல முயல்கிறார். இது கர்நாடக மாநிலத்தின் நியாயமான குடிமகன் ஒவ்வொருவனுக்கும் பசவண்ணாவின் ஆன்மாவுக்கும் அவமானம் இழைக்கும் செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் டிவிட்டுக்கு விளக்கம் பின் வருமாறு:
ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட எடியூரப்பா பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் குற்றங்கள் சாட்டப்பட்டுள்ள ரெட்டி சகோதரர்கள் என அழைக்கப்படும் சோம சேகரா மற்றும் கருணாகரா ஆகியோருக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.
பசவண்ணா என்பவர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த லிங்காயத்து தலைவர் ஆவார்.