டில்லி

தாம் அனைத்து கருத்துக்களையும் கேட்க விரும்புவதால் பாஜக இல்லாத இந்தியாவை தாம் விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ‘பாஜக இல்லாத இந்தியா தேவை’ என கூறி வருவது தெரிந்ததே.   இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்ட தலைவர்களும் தெரிவிக்கின்றனர்.   பாஜக நாட்டை பாழ்படுத்துவதாகவும் அந்தக் கட்சியின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டு அந்தக் கட்சியை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என பல காங்கிரஸ் தலைவர்கள் கூறி உள்ளனர்.  தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளர்.

அந்த பேட்டியில் ராகுல் காந்தி, “பாஜக இல்லாத இந்தியாவை நான் விரும்பவில்லை.  நான் அந்தக் கட்சியுடன் போரிடவும் தேர்தலில் தோற்கடிக்க விரும்புவதும் உண்மை தான்.  ஆனால் அதே நேரத்தில் நான் அனைவரின் கருத்துக்களையும் கேட்க விரும்புகிறேன்.    ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் நாட்டுக்கு எதிரான பேச்சுக்களையும் மத வன்முறையையும் பாஜக ஆதரிப்பதை நான் வெறுக்கிறேன்.  பாஜகவை அல்ல.

கடந்த தேர்தலில் மோடி மூன்று வாக்குறுதிகளை அளித்தார்.   அவை வேலை வாய்ப்பு அளித்தல், ஊழலை ஒழித்தல், விவசாயிகள் குறை நீக்குதல் ஆகியவை ஆகும்.   ஆனால் இதில் ஒன்றையும் அவர் நிறைவேற்றவில்லை.  வரும் 2019 தேர்தலில் மக்கள் ‘மோடிஜி.  நீங்கள் கொடுத்த மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றவிலை.  நீங்கள் பேசியது ஒன்றும் நடைபெறவில்லை” என தெரிவித்து பாஜகவின் ஆட்சியை முடித்து வைக்கப் போகிறார்கள் “  என தெரிவித்துள்ளார்.