டில்லி
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதை பா ஜ க வின் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே ஒப்புக் கொண்டுள்ளார் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
பா ஜ க மூத்த தலைவர்களில் ஒருவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் கடந்த பா ஜ க அரசில் நிதியமைச்சராக பணி ஆற்றியவர். இவர் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் நாட்டின் பொருளாதார நிலை பற்றி கட்டுரை எழுதி உள்ளார்.
அதில் குறிப்பிடப்படுவதாவது.
“இந்திய பொருளாதாரத்தில், தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெரும் குழப்பம் ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து நான் இப்போதாவது பேசி ஆக வேண்டும். இல்லை என்றால் எனது கடமையில் இருந்து நான் தவறியவன் ஆவேன். பல தவறான சீர்திருத்தங்களை கொண்டு வந்து தற்போது இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியுமே முழுக் காரணம்.
இவர்கள் இருவருமாக சேர்ந்து பலர் பல வருடங்களாக பொருளாதாரத்தை உயர்த்த உழைத்ததை வீணாக்கி விட்டனர். இது பற்றி பா ஜ க தலைவர்கள் பலருக்கும் நன்கு தெரியும். இருப்பினும் ஏதோ பயத்தினால் வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். நேற்று பயணத்தின் நிறைவுக் கூட்டமாக சுரேந்திர நகர் மாவட்டத்தில் சோடிலா நகரில் ராகுல் உரையாற்றி உள்ளார்.
அவர் தனது உரையில், “பா ஜ க தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவின் கட்டுரையை நான் படித்தேன். அதில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை மோடியும், ஜெட்லியும் பாழாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் உச்ச கட்ட குழப்பத்தில் உள்ளதாக நான் மட்டும் அல்ல, பாஜக தலைவரே கூறியுள்ளார்.
ஆளும் பா ஜ க அரசு எப்போதுமே விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள், மற்றும் எந்த ஒரு சாமானிய மக்களிடமும் அபிப்ராயம் கேட்பதே இல்லை. அவர்கள் கேட்பதெல்லாம் பெரு முதலாளிகளின் அபிப்ராயத்தை மட்டுமே.” என கூறி உள்ளார்.
மேலும் யஷ்வந்த் சின்ஹாவின் இந்த கருத்துக்கு பல காங்கிரஸ் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், “யஷ்வந்த் சின்ஹா கூறியது உண்மைதான். மேலும் அது பொருளாதாரம் குறித்த எங்களது கருத்தும் ஆகும். இதை சின்ஹா தெரிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் கட்சி இதே கருத்தைத் தான் கடந்த 18 மாதங்களாக கூறி வருகிறது” என சின்ஹாவை பாராட்டி உள்ளார்.
யஷ்வந்த் சின்ஹாவின் பொருளாதாரம் குறித்த கருத்துக்கள் பற்றி மத்திய உள்துறை ராஜ்நாத் சிங் இடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ராஜ்நாத் சிங், “இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதை அகில உலகமும் ஒப்புக் கொண்டுள்ளது. இதுவே உண்மை. இதை யாரும் மறக்கக் கூடாது. பொருளாதார விவகாரத்தில் இந்தியாவின் நம்பகத்தன்மை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது” என கூறி உள்ளார்.