
பெர்க்லி
அமெரிக்காவின் பெர்க்லி நகரில் ராகுல், “காங்கிரஸ் அரசின் 9 ஆண்டு உழைப்பை 30 நாளில் பா ஜ க அரசு அழித்து விட்டது” என கூறி உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பெர்க்லி நகரில் பல்கலைக்கழகம் ஒன்றில் ராகுல் காந்தி உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறியதாவது :
”ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைதி கொண்டு வர நாங்கள் 9 ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். கடந்த 2013ல் காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் பா ஜ க கூட்டணி அரசு தான் ஆட்சிக்கு வந்த 30 நாளிலேயே எங்கள் உழைப்பை அழித்து விட்டது. மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கி உள்ளது. மோடியுடன் கூட்டணி வைத்துள்ள காஷ்மீர் மாநில அரசும் இளைஞர்களை மீண்டும் பயங்கரவாதிகள் ஆக்குவதற்கு துணை போகிறது.
நான் பிரிவினை வாதத்தை ஆதரிப்பவன் இல்லை. பயங்கரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் என் குடும்பமும் ஒன்று. என்னுடன் என் சிறுவயதில் விளையாடிய ஒருவர் என் பாட்டியை சுட்டுக் கொன்றார். என் தந்தையையும் பயங்கர வாதத்துக்கு பறி கொடுத்தேன். பிரிவினை வாதம், பயங்கரவாதம் ஆகியவைகளுக்கு நான் என்றுமே எதிரானவன்.
வரும் 2019ல் நான் காங்கிரஸ் தலைமை ஏற்க உள்ளேன். இது எனது முடிவு அல்ல, கட்சியின் விருப்பம். அதற்கு நான் செவி சாய்க்கிறேன். உடனே எதிர்க்கட்சிகள் இது வாரிசு அரசியல் என விமர்சிக்கக்கூடும். ஆனால் எல்லா இடத்திலும் வாரிசு அரசியல் உள்ளது. இந்த ராகுலை சொல்பவர்கள் ஏனோ அகிலேஷ் யாதவ், மு க ஸ்டாலின், அனுராத் தாக்கூர், அவ்வளவு ஏன் திரையுலகில் இருக்கும் அபிஷேக் பச்சன் ஆகியோரை மறந்து விடுகின்றனர். இவர்கள் அனைவருமே வாரிசுகள் தான்.
இன்று நமது பாராளமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சாலை அமைப்பதில் காட்டும் மும்முரத்தை நாட்டுக்கு நல்ல சட்டங்கள் இயற்றுவதில் காட்டுவதில்லை. அதற்கான அதிகாரமும் அவர்களிடம் இல்லை. அனைத்து அதிகாரங்களும் இப்போது பிரதமர் அலுவலகத்தினுள் முடங்கி விட்டது. தகவல் அறியும் சட்டத்தின் எல்லையையும் பிரதமர் சுருக்கி விட்டார். தனது செயல், பணிகள் பற்றி யாரிடமும் எந்த ஆலோசனையும் மோடி செய்வதில்லை. ஆனால் தனது சிறந்த பேச்சுத்திறமையால் என் மீது தவறான பிரச்சாரத்தை நாடு முழுவதும் பரப்பி வருகிறார். அவருடைய ரூபாய் நோட்டு மதிப்பு குறைப்பு ஒன்றே அவரது திறமையின்மைக்கு மிகப் பெரிய உதாரணம்.
ஜி எஸ் டி குழறுபடிகளும் மக்களுக்கு தெரிந்ததுதான். சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத தூய்மை இந்தியா திட்டமும் பணமதிப்புக் குறைப்பால் வேலை இழப்பும் தான் மோடியின் திட்டங்கள். காங்கிரஸ் காலத்தில் நாடு பெற்ற வளர்ச்சிக்கு நேர் மாறாக இப்போது நடந்துக் கொண்டு வருகிறது.
இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்பது அடியோடு பறி போய் விட்டது. கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார்கள். முந்தைய காங்கிரஸ் அரசு அனைவரிடமும் ஆலோசானை நடத்தி ஆட்சியை நடத்தி வந்தது. எந்த ஒரு கொள்கை திணிப்பும் நடக்கவில்லை. ஆனால் இப்போது கருத்துச் சொல்லவே அனைவரும் பயப்படும் நிலையில் நாடு உள்ளது “ என ராகுல் காந்தி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]