டெல்லி: நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.
இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. புல்வாமா தாக்குதலின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்த அந்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூர்ந்து பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்த்தியாகத்தை இன்று நாம் நினைவு கூர்கிறோம். அதே நேரத்தில் நாம் எழுப்பும் கேள்விகள் என்னவெனில், இந்த தாக்குதலால் அதிகம் பயன் அடைந்தது யார்?
தாக்குதல் தொடர்பாக விசாரணையில் வெளிவந்த விஷயங்கள் என்ன? இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பாஜக அரசில் பொறுப்பேற்க போவது யார்? என்று வினவி உள்ளார்.