டெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
4 பேரும தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர். தண்டனையை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்கள், அதன் மீதான மறு ஆய்வு மனு என சட்ட நடவடிக்கைகள் 4 பேரையும் தூக்கில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றி வருகிறது.
கிட்டத்தட்ட 2 முறை அவர்களது தூக்கு தள்ளி போயிருக்கிறது. 4 பேரில் ஒருவரான வினய் குமார் சர்மா, தன்னுடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூசண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
அவர் கூறியதாவது: வினய் சர்மாவுக்கு அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக சமீபத்திய மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
அனைத்து சட்ட ரீதியான வழிமுறைகள், சோதனைகளும் நடத்தப்பட்டன. அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த பிறகே, கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார் என்றார்.
இரு தரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்து மதியம் 2 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக அவர்கள் கூறினர். அதன்படி, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வினய் சர்மாவின் உடல்நிலை குறித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அவரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
அதை எதிர்த்து வினய் சர்மா முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது, உடல் மற்றும் மனதளவில் அவர் நலமுடன் உள்ளார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.