நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரே பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.
இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஏற்கனவே எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தொகுதி நேரு குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது.
இங்கு 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றிபெற்ற நிலையில் இந்த தொகுதியை தக்கவைக்க முடிவெடுத்துள்ளார்.
வயநாடு தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி இங்கும் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இருந்தபோதும் எந்த தொகுதியை தக்க வைக்கப்போகிறார் எதை ராஜினாமா செய்வார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்த நிலையில் இன்று அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது உறுதிசெய்யப்பட்டது. மேலும், வயநாடு தொகுதி மக்கள் ராகுல் காந்தி மீது வைத்திருக்கும் அன்பிற்கும் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதமாக அவருக்கு பதிலாக அவரது சகோதரி பிரியங்கா காந்தி அங்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ராஜினாமா அறிவிப்பை அடுத்து வயநாடு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.