வயநாடு :

கொரோனா வைரஸை காரணமாகக் கூறி உலகமே வீட்டிற்குள் முடங்கினாலும், மக்களைப் பற்றிய சிந்தனையிலும் மக்கள் சேவையிலும் வெகு சிலர் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று அனைவரும் இரவு பகல் பாராது முன்களப் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலில் கண்டறியப்பட்ட கேரள மாநிலத்தில் பல்வேறு பின்தங்கிய மலைகிராமப் பகுதிகளும் போக்குவரத்திற்கு சரியான சாலை வசதியில்லாத பகுதிகளும் நிறைந்திருக்கிறது.

தொற்று நோயின் சவால் ஒருபுறமிருக்க போக்குவரத்துக்கான சவாலையும் சமாளித்து தன்னை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த வயநாடு பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்கள் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வயநாடு தொகுதிக்குட்பட்ட நூல்புழா பகுதியைச் சுற்றியுள்ள 250 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் அவர்களின் வீடுகளுக்கே சென்று இந்த மருத்துவக் குழு சேவை செய்து வருகிறது. போக்குவரத்தே இல்லாத இந்த கிராமமக்கள் தங்களின் மருத்துவத் தேவைக்கு பல கிலோமீட்டர் நடந்தே செல்லவேண்டிய அவல நிலை இருந்து வந்தது.

ராகுல் காந்தியின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த கிராமங்களுக்குச் சென்றுவர தேவையான வாகனங்களை வாங்க அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு ….