பாடகர் சித்து மூஸேவாலா உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மே 29 அன்று விலக்கிக்கொண்டது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சித்து மூஸேவாலா-வின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்த நிலையில் அவரது பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட அதேதினம் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சித்து மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு திரும்பிய நிலையில், சித்து மூஸேவாலா-வின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் மூசா கிராமத்தில் உள்ள மூஸேவாலா-வின் வீட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு அவரது பெற்றோரை சந்தித்தார்.
ராகுல் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மகனை இழந்து வாடும் பெற்றோரின் வலியும் வேதனையும் விவரிக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாகவும் அமைதியை நிலைநாட்ட ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.