புதுடெல்லி:

எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறும் நபரல்ல…உரையாடல் மற்றும் விவாதத்தின் மூலம் விசயத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்..”

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றி டில்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட புரிதல்தான் இந்த வரிகள்.

டில்லி பல்கலைக்கழக மாணவர் பிரதிஸ்தா தேவஸ்வர் தலைமையிலான மாணவர்கள் குழு, ராகுல் காந்தியுடன் வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் கலந்துரையாடியது.

புதுடெல்லியில் லோதி ரோட்டில் உள்ள சீன உணவகத்தில் மாணவர்களுடன் உணவருந்தியவாறு இந்த கலந்துரையாடல் நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ராகுல் காந்தியுடன் இரவு உணவு சாப்பிட்டனர்.  இது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்தும், இதனை கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வது குறித்தும் யோசனைகள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை களைவது, சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை களைவது குறித்த அம்சங்களை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மாணவர்களுடன் கலந்துரையாடுவது ராகுலுக்கு இது புதிதல்ல. ஆனால் ராகுலுடன் கலந்துரையாடுவது மாணவர்களுக்கு இது முதல் முறை.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுடன் தேர்வு விவாதம் என்ற கலந்துரையாடலையும், மன் கி பாத் நிகழ்ச்சியையும் காங்கிரஸ் கிண்டல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

எங்கள் தட்டுகளில் உணவு பரிமாறினார் ராகுல்காந்தி, பெரிய மனிதருக்கும், சாதாரண மனிதருக்கும் இடையிலான தோற்றம் காணாமல் போனது என்றார் ஒரு மாணவி.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற எண்ணமே இல்லாமல் சர்வசாதாரணமாக அவர் உணவகத்தில் நடந்து கொண்டார் என்கிறார் அபிலாஷ் காரி என்ற ஐஐடி மாணவர்.

இந்திய சூழலுக்கு ஏற்ப நாம் கொள்கைகளை வகுக்க வேண்டும். அழுத்தம் தரும் கல்வி முறை, கட்டண முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் கருத்தை முன் வைத்தனர்.

உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் ராகுல் காந்தியுடன் மாணவர்கள் விவாதித்தனர்.

ராகுல் வருவார் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு சிறந்த தருணமாக இருந்தது என்றார் அபிலாஷ் காரி.

தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த சட்ட மாணவர் அனில்குமார் மவுரியா தெரிவித்தார்.