டெல்லி: பாரதத்தின் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பா புறப்பட்டுச் சென்றார்.
18வது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, உலகம் முழுவதிலுமிருந்து வரும் பிரதிநிதிகளை வரவேற்க விரிவான ஏற்பாடுகளைச் அதிகாரிகள் செய்து வருகின்றனர், அதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்பட 25 க்கும் மேற்பட்ட அரசுத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய நிறுவனத் தலைவர்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும் செப்டம்பர் 8 முதல் 10 வரை பாதுகாப்பு காரணங்களுக்காக சில மெட்ரோ நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டிருக்கும். மேலும் பகுதிகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளதுடன், பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை பிறப்பித்த உத்தரவின்படி, டெல்லி மெட்ரோ ரயிலின் மோதி பாக், பிகாஜி காமா பிளேஸ், முனிர்கா, ஆர்.கே.புரம், ஐஐடி, சதர் பஜார் கண்டோன்மென்ட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். பயணிகள் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் நுழையவோ வெளியேறவோ முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இநத் நிலையில், டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் காலக்கட்டத்தில், ராகுல் காந்தியின் ஐந்து நாள் பயணமாக ஐரோப்பா புறப்பட்டு சென்றுள்ளார். முதலாவதாக பெல்ஜியம் செல்லும் ராங்குல்காந்தி, நாளை (7ந்தேதி) அங்குள்ள பிரசல்ஸ் நகருக்கு சென்று ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
தொடர்ந்து? நாளை மறுநாள் (8-ம் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் அவர், அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார்.
வரும் 9-ம் தேதி பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்கக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
வரும் 10ந்தேதி , நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்திய வம்சாவளி பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரையிலான ஒரு வருடத்திற்கு ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது, மேலும் நாடு முழுவதும் பல கூட்டங்களை நடத்தி வருகிறது. உச்சிமாநாட்டின் போது, பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதங்களில் ஈடுபடுவார்கள். ஜி20 தலைவர்களின் பிரகடனத்தை ஏற்று உச்சிமாநாடு நிறைவடையும்.
டெல்லியில், ஜி20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 முதல் 10 வரை நடைபெறும் நேரத்தில் ராகுல்காந்தி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.