புது டெல்லி:
கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலாளர்கள் வேலை இழப்பதை தவிர்க்க தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, மார்ச் 24-ஆம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஊர்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவருக்கும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இந்நிலையில், 144 ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி அளித்து உதவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலாளர்கள் வேலை இழப்பதை தவிர்க்க தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா போரிட்டு வருகிறது. இந்த போரில் உயிரிழப்பு எண்ணிக்கையை எப்படி குறைப்பது என்று கேள்வி எழுகிறது? இரண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது அவசியம் என்று நான் நம்புகிறேன். அதாவது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் அதுவும் தனிமைபடுத்தப்பட்டவர்கள் தப்பி செல்வதை தடுக்க வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்களான சிகிச்சையை பெரியளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரியளவிலான அவசர சிகிச்சை பிரிவை மருத்துவமனைகளில் உருவாக்க வேண்டும், இந்த மருத்துவமனைகள் முழு அளவிலான ஐசியு திறன் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை பொருத்தவரை, தினக்கூலிகளுக்கு உடனடியாக உதவி வழங்கப்பட வேண்டும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண நிதியை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். இதுபோன்று நிவாரண நிதி அனுப்ப தாமதப்படுத்தினால், அது பெரியளவிலான பிரச்சினையை உண்டாக்கி விடும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்த 144 தடை உத்தரவால், பெரும்பாலான தொழிற்சாலைகள் பாதிக்கபப்ட்டுள்ளன. அந்த தொழிற்சாலைகளுக்கு உதவும் வகையிலும், பெரியளவிலான வேலை இழப்பை தடுக்கும் வகையில், தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.