டில்லி

திடீர் எனப் பிரதமர் மோடி கொரோனா குறித்து சோகம் அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.  அப்போது கொரோனா பாதிப்பு பற்றிப் பேசிய மோடி திடீரென சோகம் அடைந்து அழும் குரலில் பேசினார்.   இதுவரை கொரோனா குறித்து எவ்வித உணர்ச்சியும் காட்டாத பிரதமர் திடீர் சோகம் அடைந்ததற்குப் பலரும் விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.

அவ்வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

இந்தியாவில் தற்போது தடுப்பூசிகள் கிடையாது,  வரலாற்றில் மிகவும் குறைவான ஜிடிபி, ஏராளமான கொரோனா இறப்புக்கள் என அனைத்தும் உச்சம் அடைந்துள்ளது.

மத்திய அரசு இதற்கு என்ன பதில் அளிக்கும்?

பிரதமரின் அழுகை

எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் போது மட்டும் பிரதமர் முதலைக் கண்ணீர் வடிப்பதாகக்   குற்றம் சாட்டி உள்ளார்.   மற்றொரு டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி, “முதலைகள் அப்பாவிகள், பிரதமரைப் போன்றவை அல்ல” எனப் பிரதமரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், ராகுல் காந்தி

“பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தின் காரணமாக கொரோனா தொற்றுடன் தற்போது கறுப்பு பூஞ்சை  தொற்றையும் இந்த நாடு சந்தித்து வருகின்றது.

கொரோனாவுக்கு எதிராக மருந்துகள் பற்றாக்குறை  நிலவி வரும் நிலையில், கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நோய்களைச் சரிசெய்வதற்குப் பிரதமர் மோடி விரைவில் கை தட்டுங்கள், தட்டுகளில் ஒலி எழுப்புங்கள் என்று கூறுவார்”  

எனப் பதிந்துள்ளார்.