தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழக்கின்றன, அவர்களை பிரதமர் கேலி செய்யக்கூடாது என்று ராகுல் காந்தி கூறினார்.
ரிபப்லிக் என்ற செய்தி சேனலில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சிறுவயதில் நாம் கேட்ட ஒரு நகைச்சுவையை சொல்ல விரும்புகிறேன். ஒரு பேராசிரியர் இருந்தார், அவருடைய மகள் ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார், நான் வாழ்க்கையில் சோர்வாக இருக்கிறேன், வாழ விரும்பவில்லை, அதனால் நான் காங்கரியா குளத்தில் குதித்து இறந்துவிடுவேன் என்று அதில் எழுதியிருந்தார்.
காலையில் மகள் வீட்டில் இல்லை, கட்டிலில் லெட்டரைக் கண்டதும் அவளது அப்பாவுக்கு ரொம்பக் கோபம் வந்து, “நான் ப்ரொஃபசர், இத்தனை வருஷம் உழைச்சேன், இன்னும் காங்கரியா ஸ்பெல்லிங் தப்பாக எழுதியிருக்கிறார் என்றார்” என்று ஒரு ஜோக்கை பிரதமர் மோடி கூறியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் “இளைஞர்கள் மத்தியில் மனஅழுத்தம் மற்றும் தற்கொலை என்பது நகைப்புக்குரிய விஷயம் அல்ல” என்று பிரதமரின் ஜோக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழக்கின்றன. அவர்களை பிரதமர் கேலி செய்யக்கூடாது” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
“என்சிஆர்பி தரவுகளின்படி, 2021 இல் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அவர்களில் ஏராளமானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது ஒரு சோகம், நகைச்சுவை அல்ல” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.