னாஜி

பிரதமர் மோடிக்கு தொழிலதிபர்கள் பெட்ரோல் விலை மூலம் லாபம் அடைவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

அடுத்த ஆண்டு கோவா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  அதில் ஒரு  பகுதியாக வெல்சோ கிராமத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

பிரதமர் மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.  இன்று சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.   இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரதமருக்கு நெருக்கமான 4 முதல் 5 தொழிலதிபர்களே லாபம் அடைகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவை மக்கள் தோற்கடிக்கப் போவது உறுதி. கோவா மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சி அந்த மாற்றத்தை ஏற்படுத்தும்”

எனத் தெரிவித்துள்ளார்.