டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் நடந்து வருகிறது. தனது பயணத்தில் மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

“தற்போது உத்தரப்பிரதேசத்தில் 3-ல் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் என்னும் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். உ பி மாநிலத்தில் 1½ லட்சத்துக்கு அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே குறைந்த கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட வரிசையில் நிற்கிறார்கள்.

இவ்வாறு வேலையில்லாத இளைஞர்களுக்கு இரட்டை அரசு என்ஜின் என்றால் இரட்டை அடி என்றுதான் பொருள் ஆகும். ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளிவருவதே கனவாக இருக்கிறது, மீறி ஆட்சேர்ப்பு அறிவித்தால், வினாத்தாள் கசிந்துவிடும். பிறகு தேர்வு நடந்தால் அதன் முடிவு தெரியாது. அப்படியே நீண்ட நாட்கள் காத்திருந்து முடிவு வந்தாலும், வேலையில் இணைவதை உறுதி செய்ய நீதிமன்றம் செல்ல வேண்டும்.

லட்சக்கணக்கான மாணவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்து வேலைக்கான வயது வரம்பைக் கடந்து விட்டனர். நாட்டில்  ராணுவம் முதல் ரயில்வே வரை, கல்வித்துறை முதல் காவல்துறை துறை வரை இதுதான் நிலைமை.  வேலைவாய்ப்பு என்பது ஒரு மாணவருக்கு வருவாய் ஆதாரம் மட்டுமல்ல, தனது குடும்பத்தின் வாழ்க்கை மாற்றத்துக்கான கனவும் ஆகும். இந்த கனவு சிதைவதால் ஒட்டுமொத்த குடும்பமும் நலிவடைந்து விடுகிறது.”

என்று பதிவிட்டுள்ளார்.