டில்லி

பாஜக அரசு பெட்ரோல் விலை அதிகரிப்பின் மூலம் பொதுமக்களின் பணத்தைப் பறிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

இந்தியாவில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையைத் தினசரி மாற்றுகின்றன.   கடந்த சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

முன்பு கொரோனா உச்சத்தில் இருந்த போது கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தது.   ஆனால் அப்போது மத்திய அரசு வரிகளை உயர்த்தியதால் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.  தற்போது கொரோனா முடிந்த பிறகு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.01க்கு விற்கப்படுகிறது. இன்று டீசல் ஒரு லிட்டர் ரூ.98.92க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதனால் பொதுமக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.    இந்த விலை உயர்வுக்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “தற்போது விமான எரிபொருள் விலையை விட பெட்ரோல் அதிக விலையில் விற்கப்படுகிறது.  இதன் மூலம் பொதுமக்களின் பணத்தை பாஜக அரசு பறிக்கிறது.   தேர்தலுக்கு முன்பு பாஜக அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, “மத்திய அரசு ஹவாய் செருப்பு அணிபவர்கள் கூட விமானத்தில் பறக்கிறார்கள் என அறிவித்து இருந்தது.  ஆனால் தற்போது பெட்ரோல் விற்கும் விலையில் மக்கள் சாலையில் கூட செல்ல இயலாத நிலை உள்ளது” என விமர்சித்துள்ளார்.