சென்னை:
ராகுல் காந்தி சென்னை பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மே 21 ஆம் தேதி வருகை தந்த போது அங்கு நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு வரும் ராகுல் காந்தி அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் வரும் மே 21ம் தேதி மரியாதை செலுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்து வருகை புரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரில் நாளை காலை 8 மணி அளவில் நடைபெற உள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை தலைவர் கோபண்ணா அறிவித்துள்ளார்.