பெங்களூரு
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளில் யாரை மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரிக்கிறது என தேவே கௌடாவை ராகுல் காந்தி கேட்டுள்ளார்.
வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும் காங்கிரசும் நேருக்கு நேர் போட்டியில் உள்ளன. முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டி இடுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தேவே கௌடாவிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர், “கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நடக்கும் கொள்கைப் போர். நாட்டை ஆர் எஸ் எஸ் மயமாக்க பாஜக முயல்வதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இந்த தேர்தலின் முக்கிய நோக்கமே அது தான்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் தற்போது காங்கிரசை ஆதரிக்கிறதா அல்லது பாஜகவை ஆதரிக்கிறதா? இதை அக்கட்சியின் தலைவர் தேவே கௌடா தெளிவு படுத்த வேண்டும். இதற்கான விடையை நான் மட்டும் அல்ல கர்நாடக மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார்.