டில்லி

ழங்குடி மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு அளிக்குமாறு காங்கிரஸ் முதல்வர்களை  ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் நலனுக்காக வன உரிமைகள் சட்டம் 2008 இயற்றபட்டது. பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினர் சட்டபூர்வமாக தாங்கள் அங்கு தொடர்ந்து இருந்து வருவதை உறுதிப்படுத்தி அங்கேயே வசிக்கலாம் என இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவை மையமாக கொண்ட வனவிலங்கு நல தன்னார்வ அமைப்பு ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டா இல்லாமல் வசித்து வரும் பழங்குடியினருக்கு புதிய பட்டா வழங்கக் கூடாது எனவும் அவர்களை அரசு உடனடியாக வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தானில் சுமார் 37000 பழங்குடி குடும்பங்கள் இந்த சட்டத்தால் பாதிப்பு அடைய உள்ளனர். இதில் பன்ஸ்வாரா பகுதியில் மட்டும் 16000 குடும்பங்கள் பாதிப்பு அடைவார்கள். அது மட்டுமின்றி இதே நிலை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பழங்குடியினருக்கு ஏற்பட உள்ளது.

இதை எதிர்த்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.    இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் முழு ஆதரவளிக்கும் என சொல்லி உள்ளார்.

இன்று ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதம் எழுதி உள்ளார்.   அந்த கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பழங்குடி மக்கள் ஏராளமானோர் தங்கள் குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேற்றப்படும்  அபாயம் உள்ளது.  இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முதல்வர்கள் அனைவரும் மறு சீராய்வு மனு அளிக்க வேண்டும்.

ஏற்கனவே இங்கு வசிப்போரை வெளியேற்ற வன இலாகா அதிகரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பழங்குடியினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.   அத்துடன் இவ்வாறு வெளியேற்றப் படுவதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிப்பதை  அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை எனவும் அமைச்சகம் தெரிவ்த்துள்ளது.

இந்நிலையில் இந்த வெளியேற்றம் குறித்து மறு சீராய்வு மனு அளித்து அந்த மனுவின் விசாரணை முடியும் வரை பழங்குடியினர் வெளியேற்றப் படக் கூடாது என்பதை முதல்வர்கள்  உறுதிப்படுத்த வேண்டும்.    இந்த மறுசீராய்வு மனுவின் தீர்ப்புக்கு பிறகு தீர்ப்பை பொறுத்து வன இலாகா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.