சென்னை: புதுச்சேரியில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழலில்,ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புதுச்சேரி வந்தடைந்தார். முன்னதாக இன்று முற்பகல் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல்காந்தியை, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர்.
புதுச்சேரியில் ஒருநாள் சுற்றுப்பயணம் மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மீனவர்களுடனான சந்திப்பு என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ராகுவ்காந்தி இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அதையடுத்து, தனி விமானத்தில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். சரியாக 1.30 மணி அளவில் புதுச்சேரி சென்ற ராகுல்காந்திக்கு மாநில முதல்வர் நாராயணசாமி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, 2மணி அளவில் புதுச்சேரி சோலைநகர் பகுதியில் அரசியல் கலப்பு அல்லாமல் மீனவ சமுதாய மக்களை சந்திக்கிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து,ஆட்சியின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ராகுல்காந்தியின் புதுச்சேரி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.