டில்லி
மோடி நினைப்பதும் பேசுவதும் வேறு என புரியவைத்த அருண் ஜெட்லிக்கு நன்றி தெரிவிப்பதாக ராகுல் கிண்டல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பாகிஸ்தானுடன் இணைந்து பாஜக வை தோற்கடிக்க சதி செய்வதாக மோடி குறிப்பிட்டார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பாராளுமன்றத்தில் பிரச்னை கிளப்பியது. இதனால் நாடாளுமன்றம் இயங்குவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருன் ஜெட்லி இது குறித்து பேசி உள்ளார். அவர், “மோடி எப்போதும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப் பற்றை விமர்சித்தது இல்லை. அவரது தேசப்பற்றின் மீது எந்த சந்தேகமும் கிடையாது. மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி போன்ற தலைவர்கள் நாட்டுக்காக தொண்டாற்றியவர்கள் என்பதால் அவர்கள் மீது நாங்கள் மரியாதை கொண்டுள்ளோம். தற்போது இது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தவறானவை” எனக் கூறி உள்ளார்.
இதற்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். தனது பதிவில் பாஜகவின் பொய்கள் என்னும் தலைப்பில் ஹேஷ் டாக் செய்துள்ளார். அப்பதிவில், “பிரதமர் மோடி பேச வேண்டும் என நினைத்ததை பேசவில்லை. எதை பேசினாரோ அதைப் பேச வேண்டும் என நினைக்கவில்லை. இதை புரியவைத்த ஜெட்லிக்கு நன்றி” என பதிந்துள்ளார். அத்துடன் மோடி குஜராத்தில் மன்மோகன் சிங் குறித்து பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார். இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.