லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகமாக, அம்மாநிலம் முழுவதும் 15 இடங்களில் நடக்கும் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கிடையே உத்திரப் பிரதேசத்தில் கூட்டணி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உத்திரப்பிரதேச காங்கிரஸ் தரப்பில் கூறியதாவது;
பிப்ரவரி மாதத்தில் உத்திரப்பிரதேசத்தில் 15 இடங்களில் நடக்கும் பேரணியில் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இந்த பேரணி நடக்கும்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,ராஜஸ்தானில் விவசாயிகள் கடனை புதிதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது.
இதேபோல், உத்திரப்பிரதேசத்திலும் விவசாயிகளின் கடனை ரத்து செய்யும் வாக்குறுதியை அளிக்கும்.
மக்களவைத் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை, குறிப்பாக நன்கு அறிமுகமான வேட்பாளர்களை களமிறக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் சிவ்பால் யாதவ் மற்றும் அஜீத்சிங் ஆகியோருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. அப்படி கூட்டணி அமைந்தால், தமது கட்சிக்கு 25 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று சிவ்பால் யாதவ் கோரிக்கை வைத்துள்ளார்.