புதுடெல்லி: கச்சாய் எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல் – டீசல் விலையை மட்டுப்படுத்துவதற்கு பதிலாக, கலால் வரியை உயர்த்தியுள்ளனர் மேதைகள் என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது, “இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன், இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டுமென பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன்.
ஆனால், என்னுடைய அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது மேதைகள் என்ன செய்தார்கள் என்றால், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சமீபகாலமாக சரிவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்பட்டாலும், விலை கடுமையாக வீழ்ந்தாலும் ஓரளவே குறைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 என அதிரடியாக உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.