டில்லி

ந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தயார் செய்ய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் செயலர்கள்  கலந்துக் கொண்டனர்.

உத்திரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் பொறுப்பாளரான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியும் கலந்தும் கொண்டார்.   இந்த கூட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “அனைத்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர்களையும் சந்தித்தேன். நாங்கள் பல விவரங்கள் குறித்து விவாதித்தோம். தற்போது எங்கள் அணி களத்தில் இறங்க தயார் நிலையில் உள்ளது. நங்கள் முன்னணியில் உள்ளோம்” என பதிந்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் ஸ்தாபன பொதுச் செயலர் வேணுகோபால் செய்தியாளர்களிடம், “எங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை கண்னியமான முறையில் நடத்த வேண்டும் எனவும் பாஜகவை போல் நடத்தக் கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி பிரதமர் மோடியை கோழை என கூறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவரை பொய்யர் என கூறி உள்ளார். ஒரு பொய்யரை பொய்யர் என்றோ அல்லது ஒரு கோழையை கோழை என்றோ அழைப்பது தவறில்லை. வேறு எப்படியும் அழைக்க முடியாது.” என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைத்து மாநில பொதுச் செயலாளர்களிடமும் ராகுல் காந்தி அவர்களின் தேர்தல் பணி குறித்து விவரித்துள்ளதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மேலும் ”தற்போது அரசு அமைப்புக்களைக் கொண்டு பாஜக அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டி வருவதையும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்னும் ராகுலின் எண்ணத்துக்கு ஏற்ப பல புதுமுகங்கள் வேட்பாளராக களத்தில் இறங்க உள்ளனர். ரஃபேல் ஊழல், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவைகளால் மக்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்” என கூறினார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா, “இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை தயாரித்து வெளியிட ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக தமக்கு உதவ வேண்டும் என பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.” என தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம்,”மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து நான் பணி புரிய உள்ளேன். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரிவினை மற்றும் சாதி பிரிவுகளை களைய நான் பாடுபடுவேன்” ரென தெரிவித்துள்ளார்.