டில்லி:

சுவிட்சர்லாந்தில் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை கொண்டு வந்தீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 26-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.  இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து சென்றார்.

ராகுல் ட்விட்

இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவில் தொழில் தொடங்க வாருமாறு  வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். பிறகு, மாநாட்டை முடித்துக்கொண்டு,   ஏர் இந்தியா விமானத்தில்  இன்று அதிகாலை தலைநகர் டில்லி வந்தடைந்தார்.

இந்த நிலையில்   மோடியின்  சுவிட்சர்லாந்த் பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“சுவிட்சர்லாந்தில் இருந்து வருக! கருப்பு பணத்தை மீட்போம் என்ற உங்கள் வாக்குறுதியை  பற்றி  நினைவூட்டுகிறேன்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய மோடி விமானத்தில் ஏதேனும் கொண்டு வருகிறாரா  என்று இந்திய இளைஞர்கள் காத்து இருக்கின்றனர்” என்று கிண்டலாக ராகுல்காந்தி  பதிவிட்டுள்ளார்.