டில்லி

லிகாரில் 3 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டதற்கு தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தெரிவித்துள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி காணாமல் போனதை ஒட்டி நகரில் கடும் பதட்டம் ஏற்பட்டது.   கடந்த 2 ஆம் தேதி அன்று அந்தப் பெண்ணின் சடலம் குப்பை கொட்டும் இடத்தில் கிடந்தது.     இந்த கொலைக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூத்த காவல்துறை அதிகார் ஆகாஷ் குல்ஹரி,  “இந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.   அவர் மூச்சுத் திணறல் ஏற்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.   இறந்த பெண்ணுக்கு எவ்வித பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.   நகரில் கடும் பதட்டம் நிலுவி வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “அலிகாரில் ஒரு சின்னஞ்சிறு பெண் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளித்துள்ளது.  ஒரு குழந்தையிடம் எந்த மனிதராவது இவ்வளவு கொடூரமாக நடந்துக் கொள்வாரா?  இந்த குற்றம் தண்டிக்காமல் விடக்கூடாது   உத்திரப் பிரதேச காவல் துறையினர் கொலாயாளிகளை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்” என பதிந்துள்ளார்.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி, “அலிகாரில் நடந்த கொடூரக் கொலை மனிதாபிமானமற்றதும் ஒரு குழந்தைக்கு எதிரான சொல்ல முடியாத குற்றமும் ஆகும்.    அந்த குழந்தையின் பெற்றோர்கள் துயரத்தை குறித்து என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.   இந்த கொலையால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.