மெல்போர்ன்: அஜின்கியா ரஹானேயின் ஆக்ரோஷமான கேப்டன்சி, இந்திய அணிக்கு பெரிதும் துணைபுரியும் என்று குறிப்பிட்டுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல்.

விராத் கோலி, முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படவுள்ளார் ரஹானே.

இந்நிலையில் இயான் சேப்பல் கூறியுள்ளதாவது, “கடந்த 2017ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தர்மசாலா டெஸ்ட்டில், ரஹானேவின் கேப்டன்சியைப் பார்த்தேன். அது அற்புதமான ஒன்றாக இருந்தது.

அவர் உண்மையிலேயே ஒரு ஆக்ரோஷமான கேப்டனாக இருந்தார். அதற்கு ஒரு உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் டேவிட் வார்னர் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், புதிய வீரர் குல்தீப்பை கொண்டுவந்து வார்னரை அவுட்டாக்கினார்.

இன்னொருமுறை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த ரன்னை இந்தியா சேஸிங் செய்துகொண்டிருந்தபோது, இந்திய சில விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோது, கேப்டனாக களமிறங்கிய ரஹானே, 27 பந்துகளில் 38 ரன்களை அடித்து பிரமாதப்படுத்தினார்.

‍இந்த இரண்டு சம்பவங்கள், அவரை ஒரு ஆக்ரோஷமான மற்றும் சிறந்த கேப்டனாக நான் மதிப்பிடுவதற்கு காரணமாக அமைந்தது” என்றுள்ளார் சேப்பல்.