லண்டன்: சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில், இந்தியரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான ரகுராம் ராஜனின் பெயர் முன்னிலையில் உள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஐஎம்எஃப் அமைப்பின் தற்போது மேலாண்மை இயக்குநராக உள்ள கிறிஸ்டைன் லாகார்டே, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக ஐரோப்பிய கவுன்சிலால் நியமனம் செய்யப்பட்டதையடுத்து, தனது நடப்புப் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஐஎம்எஃப் தலைவராக அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் அல்லாத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ரகுராம் ராஜனுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே ஐஎம்எஃப் அமைப்பின் முதன்மை பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் 53 வயதான ரகுராம் ராஜன்.
பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்தின் வலுவான ஆதரவும் இவருக்கு உள்ளது. இப்பதவிக்கு ரகுராம் ராஜனை தவிர, வேறு சிலரின் பெயர்களும் முன்னணியில் உள்ளன.
இங்கிலாந்து வங்கியின் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் மார்க் கார்னே, டேவிட் கேமரூன் அரசில் வேந்தர்(Chancellor) பதவியல் இருந்த ஜார்ஜ் ஓஸ்போர்ன், முன்னாள் நெதர்லாந்து நிதியமைச்சர் ஜெரோன் டிஸெல்ப்லோம் ஆகியோரின் பெயர்களும் போட்டியின் முன்வரிசையில் உள்ளன.