
புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளை நடத்திக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதியளிப்பதற்காக, ரிசர்வ் வங்கியின் உள்புற செயல்பாட்டுக் குழுவினர் பரிந்துரை செய்திருப்பதற்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது, “இப்போது எதற்காக இந்த முடிவு? இந்த விஷயத்தில், முந்திய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டிருக்கவில்லையா? நாங்கள் எதையும் வாதம் செய்ய மாட்டோம்.
வங்கியியலில், கார்ப்பரேட் ஈடுபாடு குறித்து நாம் முன்பே பரிசோதித்த மற்றும் முயற்சித்த விஷயங்கள் குறித்து இப்போது சிந்திப்பது மிகவும் முக்கியமானது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி நடத்தும் உரிமங்கள் வழங்கப்பட்டால், அந்நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் குவிக்கப்படும்.
அவர்கள் தங்களுக்கு தேவையான கடன்களை, எந்தக் கேள்வியுமின்றி, தங்களுடைய வங்கிகளிலிருந்தே பெற்றுக் கொள்வார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கிகள் தோல்வி என்பது மிக அரிதாகவே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி நடத்த அனுமதி வழங்கினால், அது முறையற்ற கடன்கள் மற்றும் பல மோசடிகளுக்கு வழிவகுக்கும். ஒரு கடனாளரால் நடத்தப்படும் வங்கியானது, எப்படி ஒரு நல்ல கடனை வழங்க முடியும்? என்று கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர் அவர்கள்.
[youtube-feed feed=1]