டில்லி
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தனது ‘தி தேர்ட் பில்லர்’ என்னும் ஆங்கில புத்தகத்தில் பல அம்சங்களை விவரித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்து வந்த ரகுராம் ராஜன் கடந்த 2016 ஆம் வருடம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அமெரிக்காவில் பொருளாதார பேராசிரியராக பணிபுரியும் அவர் காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய திட்டத்தில் பணி புரிவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரகுரான் ராஜன் தற்போது எழுதிய ‘தி தேர்ட் பில்லர்’ (மூன்றாம் தூண்) என்னும் ஆங்கில புத்தகம் வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தில் அவர் இந்திய பொருளாதார நிலை, குறைந்த பட்ச ஊதியம், ஆர் எஸ் எஸ் போன்றவைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன் தனது புத்தகத்தில், “ஆளும் பாஜகவின் தாய் இயக்கமாக ஆர் எஸ் எஸ் உள்ள்து. அந்த இயக்கம் சுதந்திர, சகிப்புத்தன்மை மிகுந்த மற்றும் முன்னேறும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை அளிக்கிறது. குடியரசு நாட்டில் அனைத்து தரப்பினரும் கருத்துக்களை கூறலாம். ஆனால் தனக்கு எதிரான கருத்துக்கள் வரும் போது அதை சகித்துக் கொள்ளும் மனதிடம் பலருக்கு இல்லாததால் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையில் உள்ள உறவில் சர்ச்சைகள் ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். ஆனால் அந்த சர்ச்சைகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டுமே தவிர உபத்திரவம் செய்யக் கூடாது. இந்த சர்ச்சைகளால் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனித்துக் கொள்வது இரு தரப்பினருக்கும் பொதுவானது.
காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்த பட்ச வருமான திட்டம் நன்கு செயல்பட வாய்ப்புள்ளது. அதற்கு முதல் கட்டமாக பல ஆய்வுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில் மற்ற நல திட்டங்களைப் போல் இந்த திட்டமும் தோல்வி அடைய வாய்ப்பு உண்டாகும்.
தற்போதுள்ள இந்திய பொருளாதார நிலை குறித்து சரியான கருத்து ஏதும் கூற முடியவில்லை. வேலையற்றோர் எண்ணிக்கை, உற்பத்தி திறன் சதவிகிதம் உள்ளிட்ட பல விவரங்களில் சரியான மற்றும் முழுமையான தகவல்கள் தரப்படவில்லை. இவ்வாறு சரியா தவறான என தெரியாத விவரங்களைக் கொண்டு எவ்வித முடிவுக்கும் வர முடியாது” என தெரிவித்துள்ளார்.