டில்லி
சர்ச்சைக்குரிய பெண் துறவி “ராதே மா” வுக்கு டில்லி போலீஸ் வரவேற்பு அளித்து அவரை அதிகாரியின் நாற்காலியில் உட்கார வைத்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மும்பை புறநகர் பகுதியான போரிவாலியில் வசிக்கும் புகழ் பெற்ற பெண் துறவி “ராதே மா” என அழைக்கப்படும் சுக்விந்தர் கவுர். 52 வயதாகும் இவருக்கு சிறு வயதில் இருந்தே கடவுளின் அருள் உள்ளதாக இவருடைய பக்தர்களால் போற்றப்படுபவர். சமீபத்தில் வெளியிடப்பட்ட போலித் துறவிகளின் பட்டியலில் இவருடைய பெயரும் காணப்பட்டது. இவர் மேல் மும்பை போலிசாரால் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ராதே மா சமீபத்தில் டில்லி வந்த போது டில்லி போலிசாரால் மாபெரும் வரவேற்பு அளிக்க்ப்பட்டது. டில்லி விவேக் விகார் காவல் நிலையத்துக்கு இவர் வரவழைக்கப் பட்டு அந்த காவல் நிலைய அதிகாரியின் இருக்கையில் இவர் அமர வைக்கப் பட்டுள்ளார். காவல் அதிகாரி ராதே மா முன் கை கட்டி நின்றுக் கொண்டு இருந்துள்ளார். இது புகைப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகி வைரல் ஆனது.
ஏற்கனவே சர்ச்சைக்குரிய பெண் துறவி என கூறப்படும் ராதே மா வின் இந்த செயல் இன்னும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. பா ஜ க அல்லாத பிற கட்சியினரும், பல சமூக ஆர்வலர்களும் இந்த செயலை கண்டித்து மீடியாக்களில் பதிந்துள்ளனர். அந்த பதிவுகளுக்கு பல நெட்டிசன்கள் கிண்டலும் கேலியுமாக பதில் அளித்துள்ளனர்.