சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. வேட்பாளர் லோகநாதன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக, அதிமுக-ஓபிஎஸ், அதிமுக-சசி, நாம் தமிழர் கட்சி போன்ற பல்வேறு கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
மக்கள் நலக்கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தனித்து களமிறங்கி உள்ளது.
அதையடுத்து மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்து உள்ளன. ஏற்கனவே வைகோவும் இடைத்தேர்தலில் பங்கேற்கவில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். தற்போது, த.மா.காவும் ஒதுக்கிக் கொள்வதாக வாசன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லோகநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் தேர்தல் அலுவலர் நாயரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மார்க்சிய கம்யூனிஸ்டு வேட்பாளரான லோகநாதன் அந்த பகுதியை சேர்ந்தவர். மற்றும், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், ஆர்.கே.நகர் பகுதி செயலாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.