சென்னை,

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

127 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் சேவியரின் மனு உள்பட 45 மனுக்களை தள்ளுபடி செய்தார் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர்.

இந்த நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும் 12 மாற்று வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, வேட்பாளர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது.

இதையடுத்து இறுதியாக  62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள் அதிக அளவு இருப்பதால், வாக்குசீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அலுவலர் அறிவித்து உள்ளார்.  ஒரு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்களின் சின்னம் என்ற அளவில் 4 மின்னனு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக இரு அணி வேட்பாளர்களான மதுசூதனன், டிடிவி.தினகரன் மற்றும் தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜ சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா , கம்யூனிஸ்டு வேட்பாளர்  லோகநாதன் ஆகியோர் முக்கிய போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.