மும்பை: மராட்டிய தலைநகரில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், அந்நகரில், கடந்த மாதத்தில், வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை 28% குறைந்துள்ளதோடு, மருத்துவத்துறை தனிமைப்படுத்தலில் இருப்போரின் எண்ணிக்கையும் 62% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரிஹன் மும்பை முனிசிபல் கார்பரேஷனில், கடந்த ஜூலை 4ம் தேதி நிலவரப்படி, வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எண்ணிக்கை 2,46,870 என்பதாக இருந்தது. ஆனால், இந்த ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 1,78,740 என்பதாக சரிந்துள்ளது.
மேலும், தனியார் நிறுவன தனிமைப்படுத்தலில், அதேகாலக்கட்டத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை 12,374 என்பதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் அந்த எண்ணிக்கை 4674 என்று பெருமளவில் குறைந்துள்ளது.
தற்போதைய நிலையில், வீட்டு தனிமைப்படுத்தலுக்கு நோயாளிகள் ஊக்குவிக்கப்படுவதால், பல தனிமைப்படுத்தல் மையங்கள் காலியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவருவதும் இதற்கான காரணங்களில் ஒன்று.