பிரபஞ்சத்தின் ரகசியம் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கும் ‘கருந்துளை’ குறித்த விஞ்ஞானிகளின் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சஸெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சேவியர் கால்மெட் கூறியுள்ளார்.
‘குவாண்டம் ஹேர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் கருந்துளை குறித்த இந்த ஆய்வு உலக இயற்பியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ‘பிசிக்ஸ் லெட்டர்ஸ் பி’ என்ற அறிவியல் ஆய்வு இதழில் அவர் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்ற தகவல்கள் அடங்கி இருப்பதாக அணு இயற்பியல் கூறுகிறது.
அதேவேளையில், கருந்துளைகள் ஒளியைக் கூட விட்டுவைக்காமல் விழுங்கிவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது, கருந்துளையால் விழுங்கப்பட்டு எந்த ஒன்றும் தனது தகவலை இழந்து விடுகிறது என்று கூறப்பட்டது.
1976 ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் இந்த முரண்பாட்டை தீர்க்க முற்பட்டார், கருந்துளைக்குள் உள்ள பொருள் தன் தகவலை இழப்பதில்லை என்று கூறினார் மேலும் கருந்துளை சுருங்கிக்கொண்டே செல்வதாக கூறினார்.
இவரது பெரும்பாலான ஆய்வு கூற்றுகள் உண்மை என்பதை விஞ்ஞானிகள் தற்போது நிரூபித்து வருகின்றனர்.
1942 ம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியலாளர். வீல் சேரில் அமர்ந்துகொண்டு, கணினி குரல் உதவியோடு பேசிக்கொண்டு, மொத்த உலகின் கவனத்தையும் தம் பக்கமாகத் திருப்பியவர்.
2018 ம் ஆண்டு மரணமடைந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஈர்ப்பு விசை மற்றும் அணு கோட்பாடுகள் குறித்த பல்வேறு விஷயங்களில் தெளிவான புரிதலைக் கொண்டுவந்தார்.
அண்டவெளியில் ஆற்றலை இழந்த நட்சத்திரங்கள் கருந்துளைகளாக மாறி இருப்பதாகவும் இதனை தொலைநோக்கிகள் அல்லது செயற்கைக்கோள் மூலமோ கண்டறிய முடியாது. இந்த கருந்துளைகள் அருகே செல்லும் பால்வெளி மண்டலங்கள் அதன் ஈர்ப்பு விசையால் சிதைவடைவதை அதிலிருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர்கள் மூலம் உணர முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
கருந்துளைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் கோட்பாடுகள் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்துள்ளது.
கருந்துளைகளைச் சுற்றியுள்ள இடத்தில் மற்றும் பொருட்களின் மீது அழுத்தத்தைச் செலுத்துகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது கருந்துளைகள் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது என்று அந்த ஆய்வுக் கட்டுரையில் சேவியர் கால்மெட் கூறியுள்ளார்.
ஈர்ப்பு மற்றும் அணு ஆய்வு குறித்த இந்த ‘குவாண்டம் ஹேர்’ ஆய்வின் முடிவுகளை சோதிக்க வெளிப்படையான வானியல் ஆய்வு முறை எதுவும் இல்லை என்ற போதும். அளவிட முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் ஈர்ப்பு ஏற்ற இறக்கங்கள் ஆராய்ச்சிக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கருந்துளைகள் குறித்த முரண்பாடுகள் நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், அதன் ஆய்வு குறித்த ஆதாரங்களை ஏற்க மேலும் சில காலம் ஆகும் என்று கால்மெட் கருத்து தெரிவித்துள்ளார்.