தோஹா:
சாலையின் வெப்பத்தை குறைக்க ‘புளு கலரிலான ரோடுகளை பரிசார்த்த முறையில் கத்தார் அரசு அமைத்து உள்ளது. இதன் காரணமாக சாலையில் செல்பவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
2022 உலகக் கோப்பை போட்டி கத்தாரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி நகரின் வெப்பத்தை குறைக்கும் வகையில், ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன், சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, கத்தாரில் உள்ள அப்துல்லா பின் ஜாஷிம் (Abdullah Bin Jassim) வீதியில் சவுக் வஹீப் ( Souq Waqif) பகுதியில் உள்ள சாலையில் “குளிர் பாதைகள் திட்டம் ”(Pilot Project Cool Pavement) என்ற பெயரில், 200 மீட்டர் தூரத்திற்கு சோதனை அடிப்படையில் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
கத்தார் நாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தின் விளைவுகளை எதிர்த்து, தலைநகரான தோஹாவின் நகர நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர சாலைகளை நீல நிறத்தில் மாற்றத் தொடங்கி உள்ளது.
பொதுவாக கருப்புநிற தார்ச்சாலைகள் வெப்பத்தை ஈர்த்து, பின்னர் அதை வெளியிடுகிறது. இதன் காரணமாக மேலும் 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகிறது என்று அந்நாட்டு பொறியாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, புளு கலர் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் சோதனை முறையே தற்போது ஒரு பகுதியில் செயல்படுத்தப் பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புளு கலர் சாலையானது, வெப்பநிலையை 15-20 டிகிரி குறைக்க உதவும், அத்துடன், சாலை யின் ஆயுளையும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் சாலையில் நிலவும் வெப்பத்தின் அளவினை கணக்கிடுவதற்கு அதிநவீன சென்சார் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..