தோகா

மெரிக்க ராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறிய நோலையில் தாலிபான்கள் அரசியல் அலுவலக தலைவரை கத்தாரில் உள்ள இந்தியர் தூதர் சந்தித்துள்ளார்.

சுமார் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் முகாம் இட்டிருந்த அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அரசு அறிவித்தது.   இதனால் தைரியமடைந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர்.   நேற்று அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானில் இருந்து அமெரிக்கா திரும்பி உள்ளது.   தாலிபான்களுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தாலிபான்களின் அரசியல் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஐ கத்தார் தலைநகர் தோகாவில்  உள்ள அவரது அலுவலகத்தில் கத்தார் நாட்டில் உள்ள இந்தியத் தூதர் தீபக் மிட்டல் சந்தித்துள்ளார்.  இது தாலிபான்கள் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் நடந்த சந்திப்பாகும்.

இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் நலன், பாதுகாப்பு, மற்றும் இந்தியாவுக்கு எளிதாகத் திரும்பி வருவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஆப்கானில் உள்ள சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வர விரும்பினால் அவர்களது பயண நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த வித தீவிரவாத  நடவடிக்கையும் நடைபெற இடம் அளிக்கக் கூடாது  என இந்தியத் தூதர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார்.  இந்த அனைத்து விவகாரங்களையும் கவனித்து சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தாலிபான்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.